Please Enter Bible Reference like John 3:16, Gen 1:1-5, etc
யோவேல் - 1 2 3
Bible Versions
Bible Books
சீயோனிலே எக்காளம் ஊதி எச்சரியுங்கள்: என்னுடைய திரு மலைமேலிருந்து கூக்குரலிடுங்கள்: நாட்டில் குடியிருப்பவர்கள் அனைவரும் நடுங்குவார்களாக! ஏனெனில், ஆண்டவரின் நாள் வருகின்றது, ஆம்: அது வந்து விட்டது.
அதுவோ இருளும் காரிருளும் கவிந்த நாள்: மப்பும் மந்தாரமும் சூழ்ந்த நாள்: விடியற்காலை ஒளி மலைகள்மேல் பரவுவதுபோல் ஆற்றல்மிகு, வெட்டுக்கிளிகளின் பெருங்கூட்டம் வருகின்றது: இதுபோன்று என்றுமே நிகழ்ந்ததில்லை: இனிமேல் தலைமுறை தலைமுறைக்கும் நிகழப்போவதுமில்லை.
அவை வரும்பொழுது தீயும் தணலும் கூட்டெரிக்கும். அவற்றின் வருகைக்குமுன் நாடு ஏதேன் தோட்டம் போலிருக்கும்: அவை போனபின்போ பாலைநிலம்போல் ஆகிவிடும்: அவற்றுக்கு எதுவுமே தப்பமுடியாது.
பார்வைக்கு அவை குதிரைகள் போலிருக்கின்றன: போர்க் குதிரைகள்போல் அவை விரைந்தோடுகின்றன.
அவை தேர்ப்படைகளின் கிறீச்சொலிபோல் இரைந்து கொண்டு, சருகுகளைச் சுட்டெரிக்கும் நெருப்புத் தணல்போல் ஒலியெழுப்பி, போருக்கு அணிவகுத்த ஆற்றல் மிக்க படைகள்போல் மலையுச்சிகளின்மேல் குதித்துச் செல்லும்.
அவற்றின்முன் மக்களினத்தார் நடுங்குவர்: அச்சத்தால் எல்லாரின் முகமும் வெளிறிப் போகும்.
அவை போர் வீரர்களைப்போல் தாவி ஓடுகின்றன: படை வீரர்களைப்போல் சுவர்மேல் ஏறுகின்றன: ஒவ்வொன்றும் தனக்குரிய பாதையில் போகின்றது: தங்கள் இலக்கைவிட்டு அவை பிறழ்வதில்லை.
ஒன்றை ஒன்று நெருக்குவதில்லை: ஒவ்வொன்றும் தன் வழி தவறாது செல்கின்றது: போர்க் கருவிகளுக்கிடையே சிக்கிக் கொண்டாலும் அவை வரிசை கலையாமல் முன்னேறுகின்றன.
நகருக்குள் பாய்ந்து செல்கின்றன: மதில்மேல் ஓடுகின்றன: வீடுகள்மேல் ஏறி, பலகணி வழியாய்த் திருடனைப்போல் உள்ளே நுழைகின்றன.
அவற்றுக்கு முன்பாக நிலம் நடுங்குகின்றது: வானம் அசைகின்றது: கதிரவனும் நிலவும் இருண்டு போகின்றன: விண்மீன்களும் ஒளி இழந்து போகின்றன.
ஆண்டவர் தம் படைகள்முன் முழக்கம் செய்கின்றார்: அவரது பாளையம் மிக மிகப் பெரிது: அவர் தம் வாக்கை நிறைவேற்ற ஆற்றல் உடையவர். ஏனெனில் ஆண்டவரின் நாள் மிகக் கொடியது: அச்சம் தர வல்லது, அதைக் தாங்கிக் கொள்ளக் கூடியவர் எவர்?
“இப்பொழுதாவது உண்ணா நோன்பிருந்து, அழுது புலம்பிக்கொண்டு, உங்கள் முழு இதயத்தோடு என்னிடம் திரும்பி வாருங்கள்” என்கிறார் ஆண்டவர்.
“நீங்கள் உங்கள் உடைகளைக் கிழித்துக்கொள்ள வேண்டாம், இதயத்தைக் கிழித்துக்கொண்டு உங்கள் கடவுளாகிய ஆண்டவரிடம் திரும்பி வாருங்கள்.” அவர் அருள் நிறைந்தவர், இரக்கம் மிக்கவர்: நீடிய பொறுமையுள்ளவர், பேரன்புமிக்கவர்: செய்யக் கருதிய தீங்கைக் குறித்து மனம் மாறுகின்றவர்.
ஒருவேளை அவர் தம் மனத்தை மாற்றிக்கொண்டு, உங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கு தானியப் படையலையும் நீர்மப் படையலையும் நீங்கள் அளிக்குமாறு உங்களுக்கு ஆசி வழங்குவார். இதை யார் அறிவார்?
சீயோனில் எக்காளம் ஊதி எச்சரியுங்கள்: புனிதமான உண்ணா நோன்புக்கென நாள் குறியுங்கள்: வழிபாட்டுப் பேரணியைத் திரட்டுங்கள்.
மக்களைத் திரண்டு வரச்செய்யுங்கள்: புனித கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யுங்கள்: முதியோரைக் கூடிவரச் செய்யுங்கள், பிள்ளைகளையும் பால் குடிக்கும் குழந்தைகளையும் ஒருசேரக் கூட்டுங்கள்: மணமகன் தன் அறையை விட்டு வெளியேறட்டும்: மணமகள் தன் மஞ்சத்தைவிட்டுப் புறப்படட்டும்.
ஆண்டவரின் ஊழியர்களாகிய குருக்கள் கோவில் மண்டபத்திற்கும் பலிபீடத்திற்கும் இடையே நின்று அழுதவண்ணம், “ஆண்டவரே, உம் மக்கள்மீது இரக்கம் கொள்ளும்: உமது உரிமைச்சொத்தை வேற்றினத்தார் நடுவில் நிந்தைக்கும் பழிச்சொல்லுக்கும் ஆளாக்காதீர்” எனச் சொல்வார்களாக! “அவர்களுடைய கடவுள் எங்கே?” என வேற்றினத்தார் கூறவும் வேண்டுமோ?
அப்பொழுது ஆண்டவர் தம் நாட்டின்மேல் பேரார்வம் கொண்டு தம் மக்கள் மீது கருணை காட்டினார்.
ஆண்டவர் தம் மக்களுக்கு மறுமொழியாகக் கூறியது இதுவே: “நான் உங்களுக்குக் கோதுமையும், திராட்சை இரசமும், எண்ணெயும் தருவேன்: நீங்களும் நிறைவு பெறுவீர்கள்: இனிமேல் வேற்றினத்தார் நடுவில் உங்களை நிந்தைக்கு ஆளாக்கமாட்டேன்.”
வடக்கிலிருந்து வந்த படையை உங்களிடமிருந்து வெகு தொலைவிற்கு விரட்டியடிப்பேன்: அதனை வறட்சியுற்றதும் பாழடைந்ததுமான நிலத்திற்குத் துரத்திவிடுவேன். அதன் முற்பகுதியைக் கீழைக் கடலுக்குள்ளும், பிற்பகுதியை மேலைக் கடலுக்குள்ளும் ஆழ்த்துவேன். பிண நாற்றமும் தீய வாடையும் அங்கே எழும்பும்: ஏனெனில் அது பெரும் தீச்செயல்களைப் புரிந்தது.
நிலமே நீ அஞ்சாதே: மகிழ்ந்து களிகூரு: ஏனெனில், ஆண்டவர் பெரிய காரியங்களைச் செய்தார்.
காட்டு விலங்குகளே, அஞ்சாதிருங்கள்: ஏனெனில், பாலைநிலப் புல்வெளிகள் பசுமையாய் இருக்கின்றன: மரங்கள் கனி தருகின்றன: அத்திமரமும் திராட்சைக் கொடியும் மிகுந்த கனி கொடுக்கின்றன.
சீயோனின் பிள்ளைகளே, அகமகிழுங்கள்: உங்கள் கடவுளாகிய ஆண்டவரை முன்னிட்டுக் களிப்படையுங்கள்: ஏனெனில், அவர் தமது நீதியை நிலைநாட்ட உங்களுக்கு முன்மாரியைத் தந்தார்: முன்போலவே உங்களுக்கு முன் மாரியையும் பின்மாரியையும் நிறைவாகத் தந்தருளினார்.
போரடிக்கும் களங்களில் கோதுமை நிறைந்திருக்கும்: ஆலைகளில் திராட்சை இரசமும் எண்ணெயும் வழிந்தோடும்.
நான் உங்களுக்கு எதிராக அனுப்பிய என் பெரும் படையாகிய வெட்டுப் புழுக்கள், இளம் வெட்டுக்கிளிகள், துள்ளும் வெட்டுக்கிளிகள், வளர்ந்த வெட்டுக்கிளிகள் ஆகியவை அழித்துவிட்ட பருவப் பலன்களை உங்களுக்கு மீண்டும் தருவேன்.
நீங்கள் வேண்டியமட்டும் உண்டு நிறைவடைவீர்கள்: உங்களை வியத்தகு முறையில் நடத்தி வந்த உங்கள் கடவுளாகிய ஆண்டவரின் பெயரைப் போற்றுவீர்கள்: இனிமேல் என் மக்கள் ஒருபோதும் நிந்தைக்கு உள்ளாகமாட்டார்கள்.
இஸ்ரயேல் நடுவில் நான் இருக்கிறேன் என்றும், ஆண்டவராகிய நானே உங்கள் கடவுள் என்றும், என்னையன்றி எவரும் இல்லையென்றும் நீங்கள் அறிந்துகொள்வீர்கள்: இனிமேல் என் மக்கள் ஒருபோதும் நிந்தைக்கு உள்ளாக மாட்டார்கள்.
அதற்குப்பின்பு, நான் மாந்தர் யாவர்மேலும் என் ஆவியைப் பொழிந்தருள்வேன்: உங்கள் புதல்வரும் புதல்வியரும் இறைவாக்கு உரைப்பர்: உங்கள் முதியோர் கனவுகளையும் உங்கள் இளைஞர்கள் காட்சிகளையும் காண்பார்கள்.
அந்நாள்களில், உங்கள் பணியாளர், பணிப்பெண்கள் மேலும் என் ஆவியைப் பொழிந்தருள்வேன்.
இன்னும் விண்ணிலும் மண்ணிலும் வியத்தகு செயல்களைச் செய்து காட்டுவேன்: எங்குமே, இரத்த ஆறாகவும் நெருப்பு மண்டலமாகவும், புகைப்படலமாகவும் இருக்கும்.
அச்சம் தரும் பெருநாளாகிய ஆண்டவரின் நாள் வருமுன்னே, கதிரவன் இருண்டு போகும்: நிலவோ இரத்தமாக மாறும்.
அப்பொழுது ஆண்டவரின் திருப்பெயரைச்சொல்லி வேண்டுவோர் யாவரும் தப்பிப்பிழைப்பர்: ஏனெனில், ஆண்டவர் கூறிய வண்ணமே, சீயோன் மலையிலும் எருசலேமிலும் எஞ்சியிருப்போர் வாழ்வு அடைவர்: ஆண்டவரால் அழைக்கப்பட்டவர்களே தப்பிப் பிழைப்பார்கள்.