Please Enter Bible Reference like John 3:16, Gen 1:1-5, etc
யோவான் - 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21
Bible Versions
Bible Books
இயேசு கலிலேயாவில் நடமாடிவந்தார். யூதர்கள் அவரைக் கொல்ல வழிதேடிக் கொண்டிருந்ததால் அவர் யூதேயாவில் நடமாட விரும்பவில்லை.
யூதர்களின் கூடார விழா அண்மையில் நிகழவிருந்தது.
இயேசுவின் சகோதரர்கள் அவரை நோக்கி, “நீர் இவ்விடத்தை விட்டு யூதேயா செல்லும். அப்போது உம் சீடர்கள் நீர் புரியும் செயல்களைக் காணமுடியும்.
ஏனெனில், பொது வாழ்வில் ஈடுபட விரும்பும் எவரும் மறைவாகச் செயல்புரிவதில்லை. நீர் இவற்றையெல்லாம் செய்வதால் உலகுக்கு உம்மை வெளிப்படுத்தலாமே!” என்றனர்.
ஏனெனில் அவருடைய சகோதரர்கள்கூட அவரிடம் நம்பிக்கை கொள்ளவில்லை.
இயேசு அவர்களிடம், “எனக்கு ஏற்ற நேரம் இன்னும் வரவில்லை: உங்களுக்கு எந்த நேரமும் ஏற்ற நேரம்தான்.
உலகு உங்களை வெறுக்க இயலாது: ஆனால் என்னை வெறுக்கிறது. ஏனெனில் உலகின் செயல்கள் தீயவை என்பதை நான் எடுத்துக்காட்டி வருகிறேன்.
நீங்கள் திருவிழாவுக்குப் போங்கள்: நான் வரவில்லை. ஏனெனில், எனக்கு ஏற்ற நேரம் இன்னும் வரவில்லை” என்றார்.
அவ்வாறு சொன்ன அவர் கலிலேயாவிலேயே தங்கிவிட்டார்.
தம் சகோதரர்கள் திருவிழாவிற்குப் போனபின் இயேசுவும் சென்றார். ஆனால் அவர் வெளிப்படையாக அன்றி மறைவாகச் சென்றார்.
திருவிழாவின்போது, “அவர் எங்கே?” என்ற யூதர்கள் இயேசுவைத் தேடினார்ள்.
மக்கள் கூடியிருந்த இடங்களிலெல்லாம் இயேசுவைப்பற்றிக்காதோடு காதாய்ப் பலவாறு பேசிக் கொண்டனர். சிலர், “அவர் நல்லவர்” என்றனர். வேறு சிலர், “இல்லை, அவர் மக்கள் கூட்டத்தை ஏமாற்றுகிறார்” என்றனர்.
ஆனால் யூதர்களுக்கு அஞ்சியதால் எவரும் அவரைப் பற்றி வெளிப்படையாகப் பேசவில்லை.
பாதித் திருவிழா நேரத்தில் இயேசு கோவிலுக்குச் சென்று கற்பிக்கத் தொடங்கினார்.
“படிப்பற்ற இவருக்கு இத்துணை அறிவு எப்படி வந்தது?” என்று யூதர்கள் வியப்புற்றார்கள்.
இயேசு மறுமொழியாக, “நான் கொடுக்கும் போதனை என்னுடையது அல்ல: அது என்னை அனுப்பியவருடையது.
அவருடைய திருவுளத்தின்படி நடக்க விரும்புவோர் இப்போதனை கடவுளிடமிருந்து வருகிறதா? அல்லது அதனை நானாகக் கொடுக்கிறேனா என்பதை அறிந்து கொள்வர்.
தாமாகப் பேசுபவர் தமக்கே பெருமை தேடிக்கொள்கிறார். தம்மை அனுப்பியவருடைய பெருமையைத் தேடுபவர் உண்மையுள்ளவர்: அவரிடத்தில் பொய்ம்மை இல்லை.
“மோசே உங்களுக்குத் திருச்சட்டத்தைக் கொடுத்தார் அல்லவா? எனினும் உங்களுள் யாரும் அச்சட்டத்தைக் கடைப்பிடிப்பதில்லை. இப்போது என்னையும் கொல்லப்பார்க்கிறீர்களே!” என்றார்.
மக்கள் மறுமொழியாக, “யார் உன்னைக் கொல்லப் பார்க்கிறார்? உனக்குப் பேய் பிடித்திருக்கிறது” என்றனர்.
இயேசு அவர்களைப் பார்த்து, “ஓய்வுநாளில் நான் செய்த ஒரே ஒரு செயலைப் பற்றி நீங்கள் அனைவரும் வியப்புறுகிறீர்கள்.
மோசே கொடுத்த விருத்தசேதனச் சட்டப்படி, நீங்களே ஓய்வுநாளில் விருத்தசேதனம் செய்கிறீர்கள்! - உண்மையில் விருத்தசேதனம் மோசேயிடமிருந்து வந்தது அல்ல: அது நம் மூதாதையர் காலத்திலிருந்தே உள்ளது -
ஒருவர் ஓய்வு நாளில் விருத்தசேதனம் செய்தாலும் ஓய்வு நாள் சட்டம் மீறப்படுவதில்லையானால், அதே ஓய்வுநாளில் நான் முழு மனிதனையும் நலமாக்கியதற்காக நீங்கள் சினம் கொள்வதேன்?
வெளித்தோற்றத்தின்படி தீர்ப்பளியாதீர்கள். நீதியோடு தீர்ப்பளியுங்கள்” என்றார்.
எருசலேம் நகரத்தவர் சிலர், “இவரைத்தானே கொல்லத் தேடுகிறார்கள்?
இதோ! இங்கே இவர் வெளிப்படையாய்ப் பேசிக்கொண்டிருக்கிறாரே! யாரும் இவரிடம் எதுவும் சொல்லவில்லையே! ஒருவேளை இவரே மெசியா என்று தலைவர்கள் உண்மையாகவே உணர்ந்துகொண்டார்களோ?
ஆனால் மெசியா எங்கிருந்து வருவார் என்பது யாருக்கும் தெரியாமல் அல்லவா இருக்கும்! இவர் எங்கிருந்து வருகிறார் என்பது நமக்குத் தெரியுமே” என்று பேசிக் கொண்டனர்.
ஆகவே கோவிலில் கற்பித்துக் கொண்டிருந்தபோது இயேசு உரத்த குரலில், “நான் யார்? நான் எங்கிருந்து வந்தேன் என்பவை உங்களுக்குத் தெரியும். ஆயினும் நானாக வரவில்லை. என்னை அனுப்பியவர் உண்மையானவர். அவரை உங்களுக்குத் தெரியாது.
எனக்கு அவரைத் தெரியும். நான் அவரிடமிருந்து வருகிறேன். என்னை அனுப்பியவரும் அவரே” என்றார்.
இதைக் கேட்ட அவர்கள் இயேசுவைப் பிடிக்க முயன்றார்கள். எனினும் அவருடைய நேரம் இன்னும் வராததால் யாரும் அவரைத் தொடவில்லை.
கூட்டத்திலிருந்த பலர் இயேசுவிடம் நம்பிக்கை கொண்டனர். அவர்கள், “மெசியா வரும்போது இவர் செய்வதைவிடவா மிகுதியான அரும் அடையாளங்களைச் செய்யப் போகிறார்?” என்று பேசிக்கொண்டார்கள்.
இயேசுவைப்பற்றி மக்கள் இவ்வாறெல்லாம் காதோடு காதாய்ப் பேசுவதைப் பரிசேயர் கேள்விப்பட்டனர். எனவே அவர்களும் தலைமைக் குருக்களும் அவரைப் பிடித்து வரும்படி காவலர்களை அனுப்பினார்கள்.
எனவே இயேசு, “இன்னும் சிறிது காலமே உங்களோடு இருப்பேன்: பின்னர் என்னை அனுப்பியவரிடம் செல்வேன்.
நீங்கள் என்னைத் தேடுவீர்கள்: ஆனால் காணமாட்டீர்கள். நான் இருக்கும் இடத்திற்கு உங்களால் வரவும் இயலாது” என்றார்.
இதை கேட்ட யூதர்கள்,”நாம் காணமுடியாதவாறு இவர் எங்கே செல்ல போகிறார்? ஒரு வேளை கிரேக்கரிடையே சிதறி வாழ்வோரிடம் சென்று கிரேக்கருக்கு கற்றுக்கொடுக்கப் போகிறாரோ?
'நீங்கள் என்னைத் தேடுவீர்கள்: ஆனால் காணமாட்டீர்கள். நான் இருக்கும் இடத்திற்கு உங்களால் வரவும் இயலாது" என்றாரே! இதன் பொருள் என்ன?” என்று தங்களிடையே பேசிக்கொண்டார்கள்.
திருவிழாவின் இறுதியான பெருநாளில் இயேசு எழுந்து நின்று உரத்த குரலில், “யாரேனும் தாகமாய் இருந்தால் என்னிடம் வரட்டும்: என்னிடம் நம்பிக்கை கொள்வோர் பருகட்டும்.
மறைநூல் கூறுவது போல் அவருடைய உள்ளத்திலிருந்து வாழ்வு தரும் தண்ணீர் ஆறாய்ப் பெருக்கெடுத்து ஓடும்” என்றார்.
தம்மிடம் நம்பிக்கை கொண்டிருப்போர் பெறப்போகும் தூய ஆவியைக்குறித்தே அவர் இவ்வாறு சொன்னார். தூய ஆவி இன்னும் அருளப்படவில்லை. ஏனெனில் இயேசு மாட்சிப்படுத்தப்படவில்லை.
கூட்டத்தில் சிலர் இவ்வார்த்தைகளைக் கேட்டு, “வரவேண்டிய இறைவாக்கினர் உண்மையில் இவரே” என்றனர்.
வேறு சிலர், “மெசியா இவரே” என்றனர். மற்றும் சிலர், “கலிலேயாவிலிருந்தா மெசியா வருவார்?
தாவீதின் மரபிலிருந்தும் அவர் குடியிருந்த பெத்லகேம் ஊரிலிருந்தும் மெசியா வருவார் என்றல்லவா மறைநூல் கூறுகிறது?” என்றனர்.
இப்படி அவரைக் குறித்து மக்களிடையே பிளவு ஏற்பட்டது.
சிலர் அவரைப் பிடிக்க விரும்பினர். ஆனால் யாரும் அவரைத் தொடவில்லை.
தலைமைக் குருக்களும் பரிசேயர்களும் அனுப்பியிருந்த காவலர்கள் அவர்களிடம் திரும்பி வந்தார்கள். அவர்கள் காவலர்களிடம், “ஏன் அவனைப் பிடித்துக்கொண்டு வரவில்லை?” என்று கேட்டார்கள்.
காவலர் மறுமொழியாக, “அவரைப் போல எவரும் என்றுமே பேசியதில்லை” என்றனர்.
பரிசேயர் அவர்களைப் பார்த்து, “நீங்களும் ஏமாந்து போனீர்களோ?
தலைவர்களிலாவது பரிசேயர்களிலாவது அவனை நம்புவோர் யாராவது உண்டா?
இம்மக்கள் கூட்டத்துக்குத் திருச்சட்டம் தெரியாது. இவர்கள் சபிக்கப்பட்டவர்கள்” என்றனர்.
அங்கிருந்த பரிசேயருள் ஒருவர் நிக்கதேம். அவரே முன்பு ஒரு நாள் இயேசுவிடம் வந்தவர். அவர் அவர்களிடம்,
“ஒருவரது வாக்குமூலத்தைக் கேளாது, அவர் என்ன செய்தாரென்று அறியாது ஒருவருக்குத் தீர்ப்பளிப்பது நமது சட்டப்படி முறையாகுமா?” என்று கேட்டார்.
அவர்கள் மறுமொழியாக, “நீரும் கலிலேயரா என்ன? மறைநூலைத் துருவி ஆய்ந்து பாரும். அப்போது கலிலேயாவிலிருந்து இறைவாக்கினர் யாரும் தோன்றுவதில்லை என்பதை அறிந்துகொள்வீர்” என்றார்கள்.
(அவர்கள் ஒவ்வொருவரும் அவரவர் வீட்டுக்குச் சென்றார்கள்.