Please Enter Bible Reference like John 3:16, Gen 1:1-5, etc
ஏசாயா - 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66
Bible Versions
Bible Books
என் ஊழியன் யாக்கோபே, நான் தேர்ந்துகொண்ட இஸ்ரயேலே, இப்பொழுது செவிகொடு.
உன்னைப் படைத்தவரும், கருப்பையில் உன்னை உருவாக்கியவரும், உனக்கு உதவி செய்பவருமாகிய ஆண்டவர் கூறுவதைக் கேள்: என் ஊழியன் யாக்கோபே, நான் தேர்ந்துகொண்ட “எசுரூன்” அஞ்சாதே!
ஏனெனில், தாகமுற்ற நிலத்தில் நீரை ஊற்றுவேன்: வறண்ட தரையில் நீரோடைகள் ஓடச் செய்வேன்: உன் வழிமரபினர் மீது என் ஆவியைப் பொழிவேன்: உன் வழித்தோன்றல்களுக்கு நான் ஆசி வழங்குவேன்:
அவர்கள் நீரோடை அருகிலுள்ள புல் போலும் நாணல்கள் போலும் செழித்து வளருவர்.
ஒருவன் “நான் ஆண்டவருக்கு உரியவன்” என்பான்: மற்றொருவன் யாக்கோபின் பெயரைச் சூட்டிக்கொள்வான்: வேறொருவன் “ஆண்டவருக்குச் சொந்தம்” என்று தன் கையில் எழுதி, “இஸ்ரயேல்” என்று பெயரிட்டுக் கொள்வான்.
இஸ்ரயேலின் அரசரும் அதன் மீட்பரும், படைகளின் ஆண்டவருமான ஆண்டவர் கூறுவது இதுவே: தொடக்கமும் நானே: முடிவும் நானே: என்னையன்றி வேறு கடவுள் இல்லை.
எனக்கு நிகர் யார்? அவன் உரத்த குரலில் அறிவிக்கட்டும். என்றுமுள மக்களை நான் ஏற்படுத்தியதிலிருந்து நடந்தவற்றை முறைப்படுத்திக் கூறட்டும். இனி நடக்கவிருப்பன பற்றியும், நிகழப்போவனபற்றியும் முன்னுரைக்கட்டும்.
நீங்கள் கலங்காதீர்கள், அஞ்சாதீர்கள்: முன்பிருந்தே நான் உரைக்கவில்லையா? அறிவிக்கவில்லையா? நீங்களே என் சாட்சிகள்: என்னையன்றி வேறு கடவுள் உண்டோ? நான் அறியாத கற்பாறை வேறு உண்டோ?
சிலை செதுக்குவோர் அனைவரும் வீணரே: அவர்கள் பெரிதாக மதிப்பவை பயனற்றவை: அவர்களின் சான்றுகள் பார்வையற்றவை: அறிவற்றவை: எனவே அவர்கள் மானக்கேடு அடைவர்.
எதற்கும் உதவாத தெய்வச் சிலையை எவனாவது செதுக்குவானா? வார்ப்பானா?
இதோ, அவனும் அவன் நண்பர்களும் வெட்கக்கேடு அடைவர்: அந்தக் கைவினைஞர் அனைவரும் மனிதர்தாமே! அவர்கள் அனைவரும் கூடிவந்து எம்முன் நிற்கட்டும்: அவர்கள் திகிலடைந்து ஒருங்கே வெட்கக்கேடுறுவர்.
கொல்லன் இரும்பைக் குறட்டால் எடுத்துக் கரிநெருப்பிலிட்டு உருக்குகிறான்: அதைச் சம்மட்டியால் அடித்து வடிவமைக்கிறான்: தன் வலிய கைகளால் அதற்கு உருக்கொடுக்கிறான். ஆனால் அவனோ பட்டினி கிடக்கிறான்: ஆற்றலை இழக்கிறான்: நீர் அருந்தாமல் களைத்துப் போகிறான்.
தச்சன் மரத்தை எடுத்து, நூல் பிடித்து கூராணியால் குறியிட்டு, உளியால் செதுக்குகிறான்: அளவுகருவியால் சரிபார்த்து, ஓர் அழகிய மனித உருவத்தைச் செய்கிறான். அதைக் கோவிலில் நிலைநிறுத்துகிறான்.
அவன் தன் தேவைக்கென்று கேதுருகளை வெட்டிக்கொள்ளலாம்: அல்லது அடர்ந்த் காட்டில் வளர்ந்த மருதமரத்தையோ, கருவாலி மரத்தையோ தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்: அல்லது அசோக மரக் கன்றை நட்டு, அது மழையினால் வளர்வதற்குக் காத்திருக்கலாம்.
அது மனிதருக்கு எரிக்கப் பயன்படுகிறது: அவன் அதிலிருந்து கொஞ்சம் எடுத்துக் குளிர்காயப் பயன்படுத்துகிறான். அதே மரத்தைக் கொண்டு தீ மூட்டி அப்பம் சுடுகிறான். அதைக் கொண்டே தெய்வத்தைச் செய்து அதை வணங்குகிறான். சிலையைச் செதுக்கி அதன்முன் பணிந்து வணங்குகிறான்.
அதில் ஒரு பகுதியை அடுப்பில் வைத்து எரிக்கிறான்: அதன்மேல் அவன் உணவு சமைக்கிறான்: இறைச்சியைப் பொரித்து வயிறார உண்ணுகிறான்: பின்னர் குளிர் காய்ந்து, “வெதுவெதுப்பாக இருக்கிறது, என்ன அருமையான தீ!” என்று சொல்லிக் கொள்கிறான்.
எஞ்சிய பகுதியைக் கொண்டு தெய்வச் சிலையைச் செதுக்கி அதன்முன் பணிந்து வணங்கி “நீரே என் இறைவன், என்னை விடுவித்தருளும்” என்று மன்றாடுகிறான்.
அவர்கள் அறிவற்றவர், விவேகமற்றவர், காணாதவாறு கண்களையும், உணராதவாறு உள்ளத்தையும் அடைத்துக் கொண்டனர்.
அவர்கள் சிந்தையில் மாற்றமில்லை: அவர்களுக்கு அறிவுமில்லை: “அதில் ஒரு பகுதியை அடுப்பில் இட்டு எரித்தேன்: அதன் நெருப்புத்தணலில் அப்பம் சுட்டேன்: இறைச்சியைப் பொரித்து உண்டேன்: எஞ்சிய பகுதியைக் கொண்டு சிலை செய்யலாமா? ஒரு மரக்கட்டை முன் நான் பணிந்து வணங்கலாமா?” என்று சொல்ல அவர்களுக்கு விவேகமும் இல்லை.
அவன் செய்வது சாம்பலைத் தின்பதற்குச் சமமானது: ஏமாறிய அவன் சிந்தனைகள் அவனை வழிவிலகச் செய்கின்றன: அவனால் தன்னை மீட்க இயலாது, “தன் வலக்கையிலிருப்பது வெறும் ஏமாற்று வேலை” என்று அவன் ஏற்றுக்கொள்வதில்லை.
யாக்கோபே, இஸ்ரயேலே, இவற்றை நீ நினைவிற் கொள்வாய்: நீ என் ஊழியன்: நான் உன்னை உருவாக்கினேன்: நீ தான் என் அடியான்: இஸ்ரயேலே, நான் உன்னை மறக்க மாட்டேன்.
உன் குற்றங்களைக் கார்மேகம் போலும், உன் பாவங்களைப் பனிப்படலம் போலும் அகற்றிவிட்டேன். என்னிடம் திரும்பி வா, நான் உனக்கு மீட்பளித்துவிட்டேன்.
வானங்களே, மகிழ்ந்து பாடுங்கள்: ஆண்டவர் இதைச் செய்தார்: மண்ணுலகின் அடித்தளங்களே, ஆர்ப்பரியுங்கள்: மலைகளே, காடே, அங்குள்ள அனைத்து மரங்களே, களிப்புற்று முழங்குங்கள்: ஏனெனில் ஆண்டவர் யாக்கோபை மீட்டருளினார்: இஸ்ரயேலில் அவர் மாட்சி பெறுகிறார்.
கருப்பையில் உன்னை உருவாக்கிய உன் மீட்பரான ஆண்டவர் கூறுவது இதுவே: அனைத்தையும் படைத்த ஆண்டவர் நானே: யார் துணையுமின்றி நானாக வானங்களை விரித்து மண்ணுலகைப் பரப்பினேன்.
பொய்யர் சொல்லும் குறிகள் பலிக்காதவாறு செய்கின்றேன்: மந்திரவாதிகளை மடையராக்குகின்றேன்: ஞானிகளை இழிவுறச் செய்து அவர்களது அறிவு மடமையெனக் காட்டுகின்றேன்:
என் ஊழியன் சொன்ன வார்த்தையை உறுதிப்படுத்துகின்றேன்: என் தூதர் அறிவித்த திட்டத்தை நிறைவேற்றுகின்றேன்: எருசலேமை நோக்கி, “நீ குடியமர்த்தப் பெறுவாய்” என்றும் யூதா நகர்களிடம், “நீங்கள் கட்டியெழுப்பப் பெறுவீர்கள்” என்றும் அவற்றின் பாழடைந்த இடங்களைச் சீரமைப்பேன்” என்றும் கூறுகின்றேன்.
ஆழ்நீர்த்தளங்களைப் பார்த்து, “வற்றிப்போ: உன் ஆறுகளை உலர்ந்த தரையாக்குவேன்” என்றும் உரைக்கின்றேன்.
சைரசு மன்னனைப்பற்றி, “அவன் நான் நியமித்த ஆயன்: என் விருப்பத்தை நிறைவேற்றுவான் என்றும், எருசலேமைப்பற்றி, “அது கட்டியெழுப்பப்படும்” என்றும் திருக்கோவிலைப்பற்றி, “உனக்கு அடித்தளம் இடப்படும்” என்றும் கூறுவதும் நானே.