Please Enter Bible Reference like John 3:16, Gen 1:1-5, etc
எரேமியா - 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52
Bible Versions
Bible Books
பென்யமின் மக்களே! எருசலேமிலிருந்து தப்பியோடுங்கள்: தெக்கோவாவில் எக்காளம் ஊதுங்கள்: பேத்தக்கரேமில் தீப்பந்தம் ஏற்றுங்கள்: ஏனெனில் வடக்கிலிருந்து தீமையும் பேரழிவும் வருகின்றன.
மகள் சீயோனை வளமான பசும்புல் தரைக்கு ஒப்பிடுவேன்.
ஆயர்கள் தங்கள் மந்தையோடு அவளிடம் வருவார்கள்: அவளைச் சுற்றிலும் கூடாரங்கள் அடிப்பார்கள்: அவரவர்தம் இடத்தில் மேய்ப்பார்கள்.
“அவளுக்கு எதிராய்ப் போருக்குத் தயாராகுங்கள்: எழுந்திருங்கள்: நண்பகலில் எதிர்த்துச் செல்வோம்: ஐயோ! பொழுது சாய்கின்றதே! மாலை நேரத்து நிழல்கள் நீள்கின்றனவே!
எழுந்திருங்கள்: இரவில் அவளை எதிர்த்துச் செல்வோம்: அவள் அரண்மனைகளை அழிப்போம்” என்பார்கள்.
படைகளின் ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: அவளுடைய மரங்களை வெட்டுங்கள்: எருசலேமுக்கு எதிராக முற்றுகைத் தளம் எழுப்புங்கள்: அவள் தண்டிக்கப்படவேண்டிய நகர்: அவளிடம் காணப்படுவது அனைத்தும் கொடுமையே.
கேணியில் நீர் சுரந்து கொண்டிருப்பது போல் அவள் தீமைகளைச் சுரந்து கொண்டிருக்கின்றாள். வன்முறை, அழிவு என்பதே அவளிடம் எழும் குரல்: நோயும் காயமுமே என்றும் என் கண்முன் உள்ளன.
எருசலேமே, எச்சரிக்கையாய் இரு: இல்லையேல், நான் உன்னைவிட்டு அகன்று போவேன்: உன்னை மனிதர் வாழாப் பாழ்நிலம் ஆக்குவேன்.
படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே: திராட்சைக் கொடிகளில் தப்புப் பழங்களை ஒன்றும் விடாது பறித்துச் சேர்ப்பது போல, இஸ்ரயேலில் எஞ்சியிருப்பதைக் கூட்டிச்சேர். திராட்சைத் தோட்டக்காரரைப்போல் கிளைகளிடையே உன் கையை விட்டுப் பார்.
நான் யாரிடம் பேசுவேன்? யாருக்கு எச்சரிக்கை விடுப்பேன்? யார் செவி கொடுப்பார்? அவர்கள் காதுகள் திறக்கப்படவில்லை: அவர்களால் செவிகொடுக்க முடியாது: ஆண்டவரின் வாக்கு அவர்களுக்குப் பழிச்சொல் ஆயிற்று: அவர்கள் அதில் இன்பம் காண்பதில்லை.
ஆண்டவரின் சீற்றம் என்னில் நிறைந்துள்ளது: அதனை அடக்கிச் சோர்ந்து போனேன்: ஆண்டவர் கூறுவது: தெருவில் இருக்கும் சிறுவர்கள்மேலும் ஒன்றாய்க் கூடியுள்ள இளைஞர்கள் மேலும் சினத்தைக் கொட்டு. கணவனும் மனைவியும், முதியோரும் வயது நிறைந்தோறும் பிடிபடுவர்.
அவர்களுடைய வீடுகளையும் நிலங்களையும் மனைவியரையும் பிறர் கைப்பற்றுவர்: ஏனெனில், நாட்டில் குடியிருப்போருக்கு எதிராய் என் கையை நீட்டப்போகிறேன்.
ஏனெனில், சிறியோர் முதல் பெரியோர் வரை அனைவரும் கொள்ளை இலாபம் தேடுகின்றார்கள்: இறைவாக்கினர் முதல் குருக்கள்வரை அனைவரும் ஏமாற்றுவதையே தொழிலாகக் கொண்டுள்ளார்கள்.
அமைதியே இல்லாதபொழுது, “அமைதி, அமைதி” என்று கூறி என் மக்களுக்கு ஏற்பட்ட காயத்தை மேலோட்டமாகவே குணப்படுத்தினர்.
அருவருப்பானதைச் செய்தபோது அவர்கள் வெட்கமடைந்தார்களா? அப்போதுகூட அவர்கள் வெட்கமடையவில்லை: நாணம் என்பதே என்னவென்று அவர்களுக்குத் தெரியாது: எனவே, மடிந்து வீழ்ந்தவர்களோடு அவர்களும் வீழ்வர்: நான் அவர்களைத் தண்டிக்கும்போது அவர்கள் வீழ்த்தப்படுவர், என்கிறார் ஆண்டவர்.
ஆண்டவர் கூறுவது இதுவே: சாலைச் சந்திப்பில் நின்று நோக்குங்கள்: தொன்மையான பாதைகள் எவை? நல்ல வழி எது? என்று கேளுங்கள்: அதில் செல்லுங்கள். அப்போது உங்களுக்கு அமைதி கிடைக்கும். அவர்களோ, “அவ்வழியே செல்ல மாட்டோம்” என்றார்கள்.
நான் உங்களுக்குக் காவலரை நியமித்தேன். “எக்காளக் குரலுக்குச் செவி கொடுங்கள்” என்றேன். அவர்களோ, “செவிசொடுக்க மாட்டோம்” என்றார்கள்.
எனவே, நாடுகளே கேளுங்கள்: மக்கள் கூட்டத்தாரே, அவர்களுக்கு என்ன நேரப்போகிறது என்று பாருங்கள்.
நிலமே, நீயும் கேள்: இதோ! இம்மக்கள்மேல் தீமை வரச்செய்வேன். அவர்களின் தீய எண்ணங்களின் விளைவே இத்தீமை. ஏனெனில், அவர்கள் என் சொற்களுக்குச் செவிசாய்க்கவில்லை: என் சட்டத்தைப் புறக்கணித்தார்கள்.
சேபா நாட்டுத் தூபமும் தூரத்து நாட்டு நறுமண நாணலும் எனக்கு எதற்கு? உங்கள் எரிபலிகள் எனக்கு ஏற்புடையவை அல்ல. உங்களின் மற்றைய பலிகளும் எனக்கு உவகை தருவதில்லை.
ஆண்டவர் கூறுவது இதுவே: இதோ இம் மக்களுக்கு எதிராகத் தடைக்கற்களை வைக்கப்போகிறேன். தந்தையரும் தனயரும் ஒன்றாகத் தடுக்கி விழுவர்: அடுத்திருப்பாரும் நண்பரும் அழிந்து போவர்.
ஆண்டவர் கூறுவது இதுவே: இதோ! வடக்கு நாட்டினின்று ஓர் இனம் வருகின்றது: மண்ணுலகின் கடை எல்லைகளினின்று பெரிய நாடு ஒன்று கிளர்ந்து எழுகின்றது.
அவர்கள் வில்லும் ஈட்டியும் ஏந்தியுள்ளார்கள்: அவர்கள் கொடியவர்: இரக்கமற்றவர்: அவர்களின் ஆரவாரம் கடலின் இரைச்சலைப் போன்றது: மகளே சீயோன்! அவர்கள் போருக்கு அணிவகுத்து குதிரைகள் மீது வருகின்றார்கள்: சவாரி செய்துகொண்டு உனக்கெதிராய் வருகின்றார்கள்:
“அவர்களைப் பற்றிய செய்தியை நாம் கேள்வியுற்றபோது நம் கைகள் தளர்ந்து போயின: கடுந்துயர் நம்மை ஆட்கொண்டது: பேறுகாலப் பெண்ணைப் போல் நாம் தவிக்கின்றோம்.
வயல்வெளிக்குப் போகவேண்டாம்: சாலைகளில் செல்ல வேண்டாம்: ஏனெனில், எதிரியின் வாள் எங்கும் உள்ளது: சுற்றிலும் ஒரே திகில்.
மகளாகிய என் மக்களே! சாக்கு உடை உடுத்துங்கள்: சாம்பலில் புரளுங்கள்: இறந்த ஒரே பிள்ளைக்காகத் துயருற்று அழுவது போல், மனமுடைந்து அழுது புலம்புங்கள். ஏனெனில், அழிப்பவன் திடீரென நமக்கெதிராய் வருவான்.”
நான் உன்னை என் மக்களுக்குள் மதிப்பீடு செய்பவனாகவும், ஆய்வாளனாகவும் ஏற்படுத்தினேன்: நீ அவர்களின் வழிகளை அறிந்து மதிப்பீடு செய்வாய்.
அவர்கள் எல்லாரும் அடங்காத கலகக்காரர்கள்: பொல்லாங்கு பேசும் ஊர்சுற்றிகள்: அவர்கள் யாவரும் வெண்கலத்தையும் இரும்பையும் போன்றவர்கள்: அவர்களின் செயல்கள் கறைபட்டவை.
துருத்திகள் தொடர்ந்து ஊதுகின்றன: காரீயம் நெருப்பில் எரித்தழிக்கப்பட்டது. தூய்மைப்படுத்தும் வேலை தொடர்ந்து நடப்பதில் பயனில்லை: ஏனெனில், தீயவர்கள் இன்னும் நீக்கப்படவில்லை.
அவர்கள் “தள்ளுபடியான வெள்ளி” என்று அழைக்கப்படுவார்கள். ஏனெனில், ஆண்டவர் அவர்களைப் புறக்கணித்துள்ளார்.