Please Enter Bible Reference like John 3:16, Gen 1:1-5, etc
எரேமியா - 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52
Bible Versions
Bible Books
செதேக்கியா அரசனானபோது அவனுக்கு வயது இருபத்தொன்று. அவன் எருசலேமில் பதினோர் ஆண்டுகள் ஆட்சி செய்தான். லிப்னாவைச் சார்ந்த எரேமியாவின் மகள் அமுற்றாள் என்பவோ அவன் தாய்.
யோயாக்கிம் செய்தது போல, செதேக்கியாவும் ஆண்டவரின் பார்வையில் தீயதெனப்பட்ட அனைத்தையும் செய்தான்.
ஆண்டவர் எருசலேமையும் யூதாவையும் தம் முன்னிலையினின்று தள்ளிவிடும் அளவுக்கு அவற்றின்மீது சினம் கொண்டார்: செதேக்கியா பாபிலோனிய மன்னனுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்தான்.
அவனது ஆட்சியின் ஒன்பதாம் ஆண்டு, பத்தாம் மாதம், பத்தாம் நாளில், பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசர் தன் எல்லாப் படைகளோடும் எருசலேமுக்கு எதிராக வந்து, பாளையம் இறங்கி, அதைச் சுற்றிலும் முற்றுகைத் தளம் எழுப்பினான்.
இவ்வாறு, அரசன் செதேக்கியா ஆட்சியேற்ற பதினொன்றாம் ஆண்டு வரை, நகர் முற்றுகைக்கு உள்ளாகியிருந்தது.
நான்காம் மாதம் ஒன்பதாம் நாள் பஞ்சம் கடுமை ஆயிற்று. நாட்டு மக்களுக்கு உணவே கிடைக்கவில்லை.
அப்பொழுது நகர மதிலில் ஒரு திறப்பு உண்டாக்கப்பட்டது. போர்வீரர் அனைவரும் அரசப் பூங்காவின் இரு மதில்களுக்கிடையே அமைந்த வாயில் வழியாக இரவோடு இரவாய் நகரைவிட்டு வெளியேறி, அராபாவை நோக்கித் தப்பியோடினர். கல்தேயரோ நகரைச் சுற்றி முற்றுகையிட்டவண்ணம் இருந்தனர்.
கல்தேயப்படையினர் அரசன் செதேக்கியாவைப் பின்தொடர்ந்து, எரிகோ சமவெளியில் அவனைப் பிடித்தனர்: அவனது படை முழுவதும் அவனை விட்டுச் சிதறி ஓடிற்று.
அவர்கள் அரசனைப் பிடித்து, ஆமாத்து நாட்டின் இரிப்பலாவில் இருந்த பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசரிடம் கொண்டு சென்றார்கள்.
பாபிலோனிய மன்னன் இரிப்லாவில் செதேக்கியாவின் புதல்வர்களை அவன் கண் முன்னே கொன்றான்: மேலும், யூதாவின் தலைவர்கள் அனைவரையும் கொன்றான்.
பாபிலோனிய மன்னன் செதேக்கியாவின் கண்களைப் பிடுங்கியபின், விலங்கிட்டு அவனைப் பாபிலோனுக்கு இழுத்துச் சென்றான்: அவன் சாகும்வரை அவனைச் சிறையில் அடைத்தான்.
பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசர் ஆட்சியேற்ற பத்தொன்பதாம் ஆண்டு, ஐந்தாம் மாதம், பத்தாம் நாளன்று, அவனுக்குப் பணிசெய்து வந்த மெயக்காப்பாளர் தலைவன் நெபுசரதான் எருசலேமுக்குள் நுழைந்தான்.
ஆண்டவரின் இல்லத்தையும் அரச அரண்மனையையும் எருசலேமில் இருந்த எல்லா வீடுகளையும் அவன் தீக்கிரையாக்கினான்: பெரிய வீடுகளை எல்லாம் தீயிலிட்டுப் பொசுக்கினான்.
மெய்க்காப்பாளர் தலைவனுடன் இருந்து கல்தேயப் படையினர் அனைவரும் எருசலேமைச் சுற்றிலும் இருந்த மதில்களை எல்லாம் தகர்த்தெறிந்தனர்.
மெய்க்காப்பாளர் தலைவர் நெபுசரதான் ஏழை மக்களுள் சிலரையும், நகரில் எஞ்கியிருந்த மக்களையும், பாபிலோனிய மன்னிடம் சரணடைந்திருந்தவர்களையும், விடப்பட்டிருந்த கைவினைஞரோடு சேர்த்து நாடுகடத்தினான்.
ஆனால் மெய்க்காப்பாளர் தலைவன் நெபுசரதான் திராட்சைத் தோட்டங்களையும் வயல்களையும் கவனிக்கும் பொருட்டு நாட்டின் ஏழைகள் சிலரை அங்கேயே விட்டுவைத்தான்.
ஆண்டவரின் இல்லத்தில் இருந்த வெண்கலத் தூண்களையும் தள்ளுவண்டிகளையும் வெண்கலக் கடலையும் கல்தேயர் தூள்தூளாக்கி, வெண்கலத்தை எல்லாம் பாபிலோனுக்குக் கொண்டு சென்றனர்.
சாம்பல்சட்டிகள், அள்ளு கருவிகள், அணைப்பான்கள், பலிக் கிண்ணங்கள், தூபக்கலசங்கள், திருப்பணிக்குப் பயன்பட்டவெண்கலப் பாத்திரங்கள் ஆகிய எல்லாவற்றையும் அவர்கள் கொண்டு போனார்கள்.
மேலும் பொன், வெள்ளியாலான கிண்ணங்கள், நெருப்புச் சட்டிகள், பலிக்கிண்ணங்கள், சாம்பல் சட்டிகள், விளக்குத் தண்டுகள், தூபக்கலசங்கள், நீர்மப்படையல் கிண்ணங்கள ஆகிய எல்லாவற்றையும் மெய்காப்பாளர் தலைவன் எடுத்துச் சென்றான்.
சாலமோன் அரசர் ஆண்டவர் இல்லத்திற்கென்று செய்திருந்த இரு தூண்கள், வெண்கலக் கடல், அதன் அடியில் இருந்த பன்னிரு வெண்கலக் காளைகள், தள்ளுவண்டிகள் ஆகிய இவற்றின் வெண்கலம் நிறுத்து மாளாது.
தூண் ஒவ்வொன்றின் உயரம் பதினெட்டு முழம்: சுற்றளவு பன்னிரண்டு முழம்: வெண்கலக் கன அளவு நான்கு விரற்கடை. உள்ளே கூடாய் இருந்தது.
தூணின் உச்சியில் ஐந்து முழ உயரமுள்ள வெண்கலப் போதிகை ஒன்று இருந்தது. போதிகையைச் சுற்றிலும் வலைப்பின்னலும் மாதுளம்பழ வடிவங்களும் வெண்கலத்தில் செய்யப்பட்டிருந்தன. மாதுளம்பழ வடிவங்கள் கொண்ட மறு தூணும் அவ்வாறே செய்யப்பட்டிருந்தது.
வலைப் பின்னலைச் சுற்றிலும் அமைக்கப் பெற்றிருந்த மொத்தம் நூறு மாதுளம் பழ வடிவங்களுள், தொண்ணூற்றாறு பக்கவாட்டில் தெரிந்தன.
மெய்க்காப்பாளர் தலைவன், தலைமைக் குரு செராயாவையையும் துணைக் குரு செப்பனியாவையும் வாயிற்காவலர் மூவரையும் சிறைப்பிடித்தவன்.
போர்வீரர்களின் தலைமை அதிகாரியையும், நகரில் இருந்த அரசவையோருள் எழுவரையும், படைத் தேர்வு மற்றும் பயிற்சி அலுவலரின் செயலரையும், நகருள் கண்ட பொது மக்களுள் அறுபது பேரையும் அவன் நகரினின்று கடத்தினான்.
மெய்க்காப்பாளர் தலைவன் நெபுசரதோன் இவர்களைப் பிடித்து, இரிப்லாவில் இருந்த பாபிலோனிய மன்னனிடம் கொண்டு சென்றான்.
ஆமாத்து நாட்டின் இரிப்லாவில் பாபிலோனிய மன்னன் இவர்களை வதைத்துக் கொன்றான். இவ்வாறு யூதா மக்கள் தங்கள் சொந்த நாட்டினின்று கடத்தப்பட்டார்கள்.
நெபுகத்னேசர் நாடுகடத்திய மக்களின் எண்ணிக்கை வருமாறு: அவன் ஆட்சியேற்ற ஏழாம் ஆண்டில் யூதா நாட்டினர் மூவாயிரத்து இருபத்து மூன்று பேர்:
அவன் பதினெட்டாம் ஆண்டில் எருசலேமினின்று நாடுகடத்தப்பட்டோர் எண்ணூற்று முப்பத்திரண்டு பேர்:
அவன் இருபத்து மூன்றாம் ஆண்டில் மெய்க்காப்பாளர் தலைவன் நெபுசரதான் நாடுகடத்திய யூதா நாட்டினர் எழுநூற்று நாற்பத்தைந்து பேர். ஆக, நாடு கடத்தப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை நாலாயிரத்து அறுநூறு.
யூதாவின் அரசன் யோயாக்கினுடைய அடிமைத்தனத்தின் முப்பத்தேழாம் ஆண்டு பயன்னிரண்டாம் மாதம் இருபத்தைந்தாம் நாளன்று, அதாவது பாபிலோனிய மன்னன் எவில்மெரதாக்கு ஆட்சிபெற்ற ஆண்டில், அவன் யூதாவின் அரசன் யோயாக்கினைத் தலைநிமிரச் செய்து, சிறையினின்று விடுவித்தான்.
அவன் யோயாக்கினுடன் கனிவாய்ப் பேசி, பாபிலோனில் தன்னோடு இருந்த அரசர்களுக்கு இல்லாத சிறப்பை அவனுக்கு அளித்தான்.
எனவே யோயாக்கின் தன் சிறை உடைகளைக் களைந்தெறிந்தான்: தன் வாழ்நாள் எல்லாம் அரசனுடன் தவறாது விருந்துண்டுவந்தான்.
அவனுடைய அன்றாடத் தேவைகளுக்காக, அவன் சாகுமட்டும், அதாவது அவன் வாழ்நாள் முழுவதும், பாபிலோனிய மன்னன் அவனுக்கு உதவித் தொகையை ஒவ்வொரு நாளும் ஒழுங்காகக் கொடுத்து வந்தான்.