Please Enter Bible Reference like John 3:16, Gen 1:1-5, etc
எரேமியா - 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52
Bible Versions
Bible Books
எரேமியாவுக்கு ஆண்டவர் அருளிய வாக்கு:
“நீ எழுந்து குயவன் வீட்டுக்குப் போ. அங்கு என் சொற்களை நீ கேட்கச் செய்வேன்.”
எனவே நான் குயவர் வீட்டுக்குப் போனேன். அங்கு அவர் சுழல்வட்டை கொண்டு வேலை செய்து கொண்டிருந்தார்.
குயவர் தம் கையால் செய்த மண் கலம் சரியாக அமையாத போதெல்லாம், அவர் அதைத் தம் விருப்பப்படி வேறொரு கலமாக வடித்துக் கொண்டிருந்தார்.
அப்போது ஆண்டவர் எனக்கு அருளிய வாக்கு:
“இஸ்ரயேல் வீட்டாரே, இந்தக் குயவன் செய்வதுபோல் நானும் உனக்குச் செய்யமுடியாதா? என்கிறார் ஆண்டவர். இந்தக் குயவன் கையிலுள்ள களிமண்ணைப்போல இஸ்ரயேல் வீட்டாரே, நீங்கள் என் கையில் இருக்கின்றீர்கள்.
ஒரு நாட்டையோ அரசையோ பிடுங்கித் தகர்த்து அழிக்கப்போவதாக நான் எப்போதாவது கூறலாம்.
எனினும், குறிப்பிட்ட அந்த நாடு தன் தீய வழியிலிருந்து திரும்புமாயின், நான் அதற்கு வருவிக்கவிருந்த தீங்கை எண்ணி வருந்துவேன்.
அதுபோல ஒரு நாட்டையோ அரசையோ கட்டியெழுப்பவும் நட்டு வளர்க்கவும் போவதாக நான் எப்போதாவது கூறலாம்.
மாறாக, அது என் சொல்லுக்குச் செவிகொடுக்காமல், என் கண்முன் தீமை செய்தால், நான் அதற்குச் செய்யப்போதாகக் கூறியிருந்த நன்மையை எண்ணி வருந்துவேன்.
ஆகையால் இப்போது நீ யூதா நாட்டினரையும் எருசலேம் வாழ் மக்களையும் நோக்கிக் கூற வேண்டியது: “ஆண்டவர் கூறுவது இதுவே: உங்களுக்கு எதிராய் வரப்போகும் தீமைக்கு வடிவம் கொடுத்துக் கொண்டிருக்கிறேன். உங்களுக்கு எதிராய் ஒரு திட்டம் தீட்டுகிறேன்: ஆதலால் நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் தீய வழியிலிருந்து திரும்புங்கள்: உங்கள் வழிகளையும் செயல்களையும் திருத்திக்கொள்ளுங்கள்.”
அவர்களோ, “இதெல்லாம் சொல்லிப் பயனில்லை. எங்கள் திட்டப்படியே நாங்கள் நடப்போம். நாங்கள் ஒவ்வொருவரும் எங்கள் தீய இதயத்தின் பிடிவாதப்படியே செயல்படுவோம்” என்பார்கள்.
எனவே ஆண்டவர் கூறுவது இதுவே: “இதுபோன்ற செயலைப் பற்றிக் கேள்விப்பட்டதுண்டா? என்று நாடுகளிடையே கேட்டுப்பார். கன்னி இஸ்ரயேல் பெரும் கோரச் செயல் ஒன்று செய்துள்ளாள்.
லெபனோன் மலையின் உறைபனி அதன் பாறை உச்சிகளிலிருந்து அகல்வதுண்டோ? அதலிருந்து வழிந்தோடும் தண்ணீரால் நீரோடைகள் வற்றிப்போவதுண்டோ?
என் மக்களோ என்னை மறந்து விட்டார்கள்: இல்லாத ஒன்றிற்குத் தூபம் காட்டுகின்றார்கள்: தங்கள் வழிகளிலே தொன்மையான பாதைகளிலே தடுமாறுகின்றார்கள்: நெடுஞ்சாலையை விட்டுவிட்டு ஒதுக்கு வழிகளிலே நடக்கின்றார்கள்.
அவர்கள் நாடு கொடூரமாய்க் காட்சியளிக்கும்: காலமெல்லாம் ஏளனத்துக்கு உள்ளாகும்: அவ்வழியே செல்லும் ஒவ்வொருவனும் திகிலடைவான்: தலையை ஆட்டிக்கொண்டே செல்வான்.
கீழைக் காற்றைப்போல் அவர்கள் எதிரிகளுக்குமுன் அவர்களைச் சிதறடிப்பேன்: அவர்களின் துன்பக் காலத்தில் என் முகத்தையல்ல, முதுகையே அவர்களுக்குக் காண்பிப்பேன்.”
அப்போது அவர்கள் “வாருங்கள், எரேமியாவுக்கு எதிராகச் சூழ்ச்சி செய்வோம். குருக்களிடமிருந்து சட்டமும், ஞானிகளிடமிருந்து அறிவுரையும், இறைவாக்கினரிடமிருந்து இறைவாக்கும் எடுபடாது. எனவே அவர்மீது குற்றம் சாட்டுவோம். அவர் சொல்வதைக் கேட்கவேண்டாம்” என்றனர்.
ஆண்டவரே, என்னைக் கவனியும்: என் எதிரிகள் சொல்வதைக் கேளும்.
நன்மைக்குக் கைம்மாறு தீமையா? என் உயிரைப் போக்கக் குழிபறித்திருக்கின்றார்கள்: அவர்கள்மேல் உமக்கிருந்த சினத்தைப் போக்குவதற்காக அவர்களைக் குறித்து நல்லதை எடுத்துச் சொல்வதற்கு நான் உம்முன் வந்து நின்றதை நினைவுகூரும்.
ஆகவே அவர்களுடைய பிள்ளைகள் பஞ்சத்தால் மடியட்டும்: அவர்கள் வாளுக்கு இரையாகட்டும்: அவர்தம் மனைவியர் விதவையராய்த் தனியராகட்டும்: கணவர்கள் கொல்லப்படட்டும்: இளைஞர்கள் போரில் வாளால் மடியட்டும்.
திடீரெனக் கொள்ளைக் கூட்டத்தினர் அவர்களிடையே வரட்டும். அவர்கள் வீடுகளிலிருந்து அழுகுரல் கேட்கட்டும்: ஏனெனில் அவர்கள் என்னைப் பிடிக்கக் குழி பறித்தார்கள்: என் கால்களுக்குக் கண்ணி வைத்தார்கள்.
ஆண்டவரே! என்னைக் கொல்வதற்காக அவர்கள் செய்த சதித் திட்டங்களை எல்லாம் நீர் அறிவீர்: அவர்கள் குற்றத்தை மன்னியாதேயும்: அவர்கள் பாவத்தை உம் முன்னிலையிலிருந்து அகற்றிவிடாதேயும்: அவர்கள் உம்முன் வீழ்ச்சியுறட்டும்: உம் சினத்தின் நாளில் அவர்களின் செயல்களுக்கு ஏற்றபடி அவர்களை நடத்தும்.