Please Enter Bible Reference like John 3:16, Gen 1:1-5, etc
எரேமியா - 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52
Bible Versions
Bible Books
இஸ்ரயேல் வீட்டாரே! ஆண்டவர் உங்களுக்குக் கூறும் சொல்லைக் கேளுங்கள்.
ஆண்டவர் கூறுவது இதுவே: வேற்றினங்களின் வழியைக் கற்றுக் கொள்ளாதீர்: வானத்தில் தோன்றும் அடையாளங்களைக் கண்டு கலங்காதீர்: வேற்றினத்தாரே அவற்றால் கலக்கமுறுவர்.
வேற்றினங்கள் வழிபடும் சிலைகள் வீணானவை: அவை காட்டிலிருந்து வெட்டப்பட்ட மரத்தாலானவை: கைவினைஞர் உளியால் செய்த வேலைப்பாடுகள்.
அவை பொன், வெள்ளியால் அணி செய்யப்பட்டவை. அசையாதபடி ஆணி, சுத்தியல் கொண்டு பொருத்தப் பெற்றவை.
அவை வெள்ளரித் தோட்டத்துப் பொம்மை போன்றவை: அவற்றால் பேச முடியாது: அவற்றைத் தூக்கிக்கொண்டுதான் செல்லவேண்டும். அவற்றால் நடக்கவும் முடியாது. அவை நன்மையும் செய்யா: தீமையும் செய்யா: அவற்றைக் கண்டு அஞ்ச வேண்டாம்.
ஆண்டவரே! உமக்கு நிகர் யாருமிலர்: நீர் பெரியவர்: உமது பெயர் ஆற்றல் மிக்கது.
மக்களினங்களின் மன்னரே! உமக்கு அஞ்சாதவர் யார்? அரசுரிமை உமதே: வேற்றினத்தாரின் ஞானிகள் அனைவரிலும் அவர்களின் அரசுகள் அனைத்திலும் உமக்கு நிகர் யாருமிலர்.
அவர்கள் மூடர்களும் முட்டாள்களுமாய் உள்ளனர்: அவர்களது போதனையின் பொருளாம் சிலைகள் மரக்கட்டைகளே.
தர்சீசிலிருந்து வெள்ளித் தகடுகளும், ஊபாசிலிருந்து பொன்னும் வந்து சேர்கின்றன. அவை கைவினைஞரின் வேலைப்பாடுகள்: பொற்கொல்லனின் கைத்திறனால் ஆனவை: ஊதா, கருஞ்சிவப்பு உடைகளைக் கொண்டவை. அவை எல்லாமே தேர்ச்சிபெற்ற கைவினைஞரின் வேலைப்பாடுகள்.
ஆனால், ஆண்டவரே உண்மையான கடவுள்! அவரே வாழும் கடவுள்! என்றும் ஆளும் அரசர்! அவர் வெஞ்சினம் கண்டு நிலம் நடுங்கும்: அவர் கடுங்கோபத்தை வேற்றினத்தார் தாங்கிக்கொள்ளார்.
நீ அவர்களுக்கு இவ்வாறு கூறு: விண்ணையும் மண்ணையும் உருவாக்காத அந்தத் தெய்வங்கள் மண்ணின் மீதும் விண்ணின் கீழும் இல்லாதொழியும்.
அவரே தம் ஆற்றலால் மண்ணுலகைப் படைத்தார்: தம் ஞானத்தால் பூவுலகை நிலை நாட்டினார்: தம் கூர்மதியால் விண்ணுலகை விரித்தார்.
அவர் குரல் கொடுக்க வானத்து நீர்த்திரள் முழக்கமிடுகிறது: மண்ணுலகின் எல்லையினின்று மேகங்கள் எழச்செய்கிறார்: மழை பொழியுமாறு மின்னல் வெட்டச் செய்கிறார்: தம் கிடங்குகளினின்று காற்று வீசச் செய்கிறார்.
மனிதர் யாவரும் மூடர்கள், அறிவிலிகள்: கொல்லர் எல்லாரும் தம் சிலைகளால் இகழ்ச்சியுற்றனர்: அவர்களின் வார்ப்புப் படிமங்கள் பொய்யானவை: அவற்றுக்கு உயிர் மூச்சே இல்லை.
அவை பயனற்றவை: ஏளனத்துக்குரிய வேலைப்பாடுகள்: தம் தண்டனையின் காலத்தில் அவை அழிந்துவிடும்.
யாக்கோபின் பங்காய் இருப்பவரோ இவற்றைப் போன்றவர் அல்லர்: அவரே அனைத்தையும் உருவாக்கியவர்: அவரது உரிமைச் சொத்தாகிய இஸ்ரயேல் இனத்தை உருவாக்கியவரும் அவரே: படைகளின் ஆண்டவர் என்பது அவர் பெயராகும்.
முற்றுகையிடப்பட்டவனே, தலையில் கிடக்கும் உன் பொருள்களை மூட்டையாகக் கட்டு.
ஏனெனில் ஆண்டவர் கூறுவது இதுவே: நாட்டில் வாழ்வோரை இத்தருணத்தில் வீசி எறிவேன்: அவர்கள் என்னைக் கண்டுணருமாறு அவர்களுக்குத் துன்பம் வருவிப்பேன்.
ஐயோ நான் நொறுங்குண்டேன்: என் காயம் கொடியது: நானோ “உண்மையில் இது ஒரு நோய்: நான் இதைத் தாங்கியே ஆக வேண்டும்” என்று எண்ணிக்கொண்டேன்.
என் கூடாரம் அழிக்கப்பட்டது: அதன் கயிறுகளெல்லாம் அறுத்தெறியப்பட்டன: என் மக்கள் என்னைவிட்டுச் சென்றுவிட்டனர்: அவர்கள் இங்கு இல்லை: என் கூடாரத்தை மீண்டும் எழுப்புவார் எவருமிலர்: அதன் திரைகளைக் கட்டுவார் யாருமிலர்.
ஏனெனில், மேய்ப்பவர்கள் மூடர்களாய் இருந்தனர்: அவர்கள் ஆண்டவரைத் தேடவில்லை: எனவே, அவர்கள் வாழ்வு வளம் பெறவில்லை: அவர்களின் மந்தைகள் எல்லாம் சிதறிப்போயின.
குரல் ஒலி ஒன்று கேட்கின்றது: அது அண்மையில் ஒலிக்கின்றது: வடக்கு நாட்டிலிருந்து பெருங் கொந்தளிப்பு எழுகின்றது: யூதாவின் நகர்கள் பாழாகிக் குள்ள நரிகளின் வளையாகப் போகின்றன.
ஆண்டவரே! நான் அறிவேன்: மனிதர் செல்ல வேண்டிய வழி அவர்களின் கையில் இல்லை: நடப்பவன் காலடிப் போக்கும் அவர்களின் அதிகாரத்தில் இல்லை.
ஆண்டவரே! உம் சினத்திற்கு ஏற்ப அன்று, உன் நீதிக்கு ஏற்ப என்னைத் திருத்தியருளும். இல்லையெனில், நான் ஒன்றுமில்லாமை ஆகிவிடுவேன்.
உம்மை அறியாத வேற்றினத்தார் மேலும், உம் பெயரைச் சொல்லி மன்றாடாத குடும்பத்தார் மேலும் உன் சீற்றத்தைக் காட்டியருளும். ஏனெனில், அவர்கள் யாக்கோபை விழுங்கிவிட்டார்கள்: விழுங்கி முற்றிலும் அழித்து விட்டார்கள்: அவர் குடியிருப்பையும் பாழாக்கிவிட்டார்கள்.