Please Enter Bible Reference like John 3:16, Gen 1:1-5, etc
எசேக்கியேல் - 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48
Bible Versions
Bible Books
ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது:
மானிடா! தீர் நகர் குறித்து இரங்கற்பா ஒன்று பாடு.
கடற்கரைத் துறையில் இருந்து கொண்டு பல்வேறு கடற்கரை மக்களுடன் வாணிபம் செய்கின்ற தீர் நகருக்குச் சொல்: தீர் நகரே! “நான் அழகில் சிறந்தவள்” என நீ சொல்லிக்கொள்கின்றாய்.
கடலின் தொலைவிடத்தை உன் எல்லைகள் எட்டும். உன்னைக் கட்டினோர் உன் அழகை நிறைவு செய்தனர்.
செனீரிலிருந்து வந்த தேவதாரு மரங்களால் உனக்குப் பலகைகள் செய்தனர்: லெபனோனின் கேதுரு மரத்தால் உனக்குப் பாய்மரம் அமைத்தனர்.
பாசானிலிருந்து கொண்டுவந்த கருவாலி மரங்களால் துடுப்புகள் செய்தனர்: கித்திம் தீவுகளின் சவுக்கு மரங்களால் உன் மேல்தளம் கட்டி அதில் தந்தங்களை இழைத்தனர்.
எகிப்தியப் பூப்பின்னல் பட்டுத்துணி உன் பாய்மரக் கொடியாயிற்று: எலிசா தீவின் நீலத்துணியும் சிவப்புத்துணியும் விதானமாயின.
சீதோன், அர்வாத்து குடிமக்கள் உனக்குத் தண்டுவலிப்போர் ஆயினர்: தீர் நகரே! உன் திறமைமிக்க ஆடவர் உன்னிடம் இருந்தனர்: அவர்களே உன் மாலுமிகள் ஆயினர்.
கேபால் நகரின் மூத்த கைவினைஞர் பழுது பார்க்கும் பணிபுரிந்தனர்: கடலிலுள்ள எல்லா மரக்கலங்களும் அதன் மாலுமிகளும் உன் வாணிபப் பெருக்கில் ஆர்வம் கொண்டனர்.
பாரசீகர்? லூதியர், பூத்தியர் முதலியோர் உன் படையில் வீரராய்ச் சேவை செய்தனர். உன் மதில்களில் அவர்கள் தங்கள் கேடயங்களையும், தலைச் சீராக்களையும் தொங்கவிட்டு உனக்குப் பெருமை சேர்த்தனர்.
அர்வாதியரும், ஏலேக்கியரும் உன் மதில்மேல் எப்பக்கமும் நின்றனர். கம்மாதியர் உன் காவல்மாடங்களில் நின்றனர்: தங்கள் கேடயங்களை உன் மதில்களில் எப்பக்கமும் தொங்கவிட்டு உன் அழகுக்கு அழகு சேர்த்தனர்.
உன் பெருஞ்சொத்து காரணமாய் தர்சீசு உன்னோடு வாணிபம் செய்தது. வெள்ளி, இரும்பு, வெள்ளீயம், காரீயம் ஆகியவற்றை உன் வாணிபப் பொருள்களாய்ப் பண்டம் மாற்றினர்.
யாவானும் தூபாலும் மெசேக்கும் உன்னோடு வாணிபம் செய்தன. உன் பொருள்களுக்காய் அடிமைகளையும் வெண்கலத்தையும் பண்டம் மாற்றினர்.
உன் வணிகப் பொருள்களுக்காய்ப் பெத்தொகர்மாவினர் குதிரைகளையும் போர்க் குதிரைகளையும் கோவேறு கழுதைகளையும் பண்டம் மாற்றினர்.
தெதான் மக்கள் உன்னுடன் வாணிபம் செய்தனர். பல கடற்கரை நகர் மக்கள் உன் வாடிக்கையாளர் ஆயினர். அவர்கள் யானைத் தந்தங்களையும் கருங்காலி மரங்களையும் உன் பொருள்களுக்கு ஈடாய்த் தந்தனர்.
சிரியர் உன் மிகுதியான பொருள்களை முன்னிட்டு உன்னுடன் வாணிபம் செய்தனர். அவர்கள் சிவப்புக் கற்கள், சிவப்புப் பட்டாடைகள், பூப்பின்னலாடைகள், விலையுயர்ந்த நார்ப்பட்டு ஆடைகள், பவளங்கள், பளிங்குக் கற்கள் யாவற்றையும் உன் சந்தைக்குக் கொண்டு வந்தனர்.
யூதாவும், இஸ்ரயேலும் உன்னுடன் வாணிபம் செய்தன. உன் பொருள்களுக்காய் மின்னித்து, பன்னாக்கு ஆகிய ஊர்களின் கோதுமை, தைலங்கள், தேன், எண்ணெய், நறுமணப் பொருள்கள் ஆகியவற்றைப் பண்டம் மாற்றினர்.
தமஸ்கு நகரினர் உன்னுடைய மிகுதியான செல்வத்திற்காகவும் பலவகைப் பொருள்களுக்காகவும் உன்னுடன் வாணிபம் செய்து, எல்போனின் திராட்சை இரசத்தையும் சகாரின் கம்பளியையும் பண்டம் மாற்றினர்.
தாணியரும் ஊசாவிலுள்ள கிரேக்கரும் உன்னுடன் வாணிபம் செய்தனர். அடித்த இரும்பு, இலவங்கம், வசம்பு ஆகியவற்றைப் பண்டம் மாற்றினர்.
தெதான் நாட்டினர் குதிரையில் சவாரி செய்ய உதவும் சேணங்கள் கொண்டு வந்து உன்னிடம் வாணிபம் செய்தனர்.
உன் வாடிக்கையாளரான அரேபியா, கேதார் ஆகிய நாட்டு மன்னர்கள் ஆட்டுக்குட்டிகளையும், கிடாய்களையும், வெள்ளாடுகளையும் கொண்டுவந்து உன்னுடன் வாணிபம் செய்தனர்.
சேபா மற்றும் இராமா ஆகிய நகர்களின் வணிகர்கள் உன்னுடன் வாணிபம் செய்தனர். அவர்கள் உன் பலவகைப் பொருள்களுக்காய் விலையுயர்ந்த நறுமணப் பொருள்களையும் இரத்தினக் கற்களையும் தங்கத்தையும் பண்டம் மாற்றினர்.
ஆரான், கன்னே, ஏதேன் நகரினரும், சேபா, அசூர், கில்மாது நாட்டினரும் உன்னுடன் வாணிபம் செய்தனர்.
அவர்கள் சிறந்த போர்வைகள், நீலப்பட்டாடைகள், பூப்பின்னலாடைகள், பல வண்ணக் கம்பளங்கள், நேர்த்தியாய்ப் பின்னிய கயிறுகள் ஆகியவற்றை உன் சந்தையில் கொண்டுவந்து பண்டம் மாற்றினர்.
தர்சீசு நகர்க் கப்பல்கள் உன் பொருள்களை ஏற்றிச் செல்கின்றன: கடல் நடுவே மிகுந்த சரக்கால் சுமத்தப்பட்டுள்ளாய்!
தண்டு வலிப்போர் உன்னை ஆழ்கடலில் கொண்டு செல்கின்றனர்: ஆனால் கீழைக்காற்று கடலின் நடுவே உன்னை உடைத்துவிடும்.
உன் கப்பல் உடையும் நாளில் உன் செல்வமும் வணிகப் பொருள்களும் உன் கடலோடிகளும் மாலுமிகளும் பழுதுபார்ப்போரும் வணிகரும் உன் போர்வீரர் யாவரும், கப்பலில் இருக்கும் எல்லாரும் ஆழ்கடலில் மூழ்கிப் போவர்.
உன் மாலுமிகள் ஓலமிடுகையில், கடற்கரை நாடு அதிரும்.
தண்டு வலிப்போர் அனைவரும் கப்பல்களைக் கைவிட்டுவிடுவர்: கடலோடிகளும் எல்லா மாலுமிகளும் கடற்கரையில் வந்து நிற்பர்.
உரத்த குரலெழுப்பி, உன்னைக் குறித்துக் கசந்தழுவர்: புழுதியைத் தங்கள் தலைமேல் வாரிப்போடுவர்: சாம்பலில் புரண்டழுவர்.
உன் பொருட்டுத் தங்கள் தலைகளை மழித்துக்கொள்வர்: சாக்கு உடையை உடுத்திக் கொள்வர்: உனக்காக உளம் நொறுங்கி அழுவர்: மனங்கசந்து புலம்புவர்.
உனக்காக அழுது புலம்புகையில், உன்னைக் குறித்து இரங்கற்பா ஒன்று பாடுவர்: “கடல்களால் மூழ்கடிக்கப்பட்ட தீருக்கு நிகரான நகரேது?” எனப் பாடுவர்.
உன் வணிகப் பொருள்கள் கடல் கடந்து செல்கையில், பல்வேறு நாட்டினரை நிறைவு செய்தாய்: உன் பெரும் செல்வத்தாலும் வணிகப் பொருள்களாலும் மண்ணுலகின் மன்னர்களைச் செல்வர் ஆக்கினாய்.
இப்போது நீயோ கடலால் நொறுங்கிவிட்டாய்: கடலின் ஆழத்தில் அமிழ்ந்து விட்டாய்: உன் பொருள்களும் உன் நடுவில் இருந்த மாலுமிகளும் கடலுக்குள் மூழ்கிவிட்டனர்.
கடற்கரையில் வாழும் அனைவரும் உன்னைக் குறித்துத் திகைத்து நிற்கின்றனர்: அவர்களின் மன்னர்கள் பேரச்சம் கொள்கின்றனர்: அவர்களின் முகமோ அச்சத்தால் உருக்குலைந்துள்ளது.
மக்களினங்களின் வணிகர்கள் உன்னைப் பழித்துரைக்கின்றனர்: நடுங்கற்குரியு முடிவுக்கு வந்துள்ளாய்! இனி ஒரு நாளும் நீ வாழவே மாட்டாய்!