Please Enter Bible Reference like John 3:16, Gen 1:1-5, etc
ஆகாய் - 1 2
Bible Versions
Bible Books
ஏழாம் மாதத்தின் இருபத்தோராம் நாளன்று, ஆண்டவரின் வாக்கு இறைவாக்கினர் ஆகாய் வாயிலாக அருளப்பட்டது:
“யூதாவின் ஆளுநரும் செயல்தியேலின் மகனுமாகிய செருபாபேலிடமும் தலைமைக் குருவும் யோசதாக்கின் மகனுமாகிய யோசுவாவிடமும் மக்களுள் எஞ்சியிருப்போர் அனைவரிடமும் இப்பொழுது நீ போய் இவ்வாறு சொல்:
'இந்தக் கோவிலின் முன்னைய மாட்சியைக் கண்டவர் எவராகிலும் உங்களிடையே இன்னும் இருக்கின்றனரா? இப்போது இது உங்களுக்கு எக்கோலத்தில் தோன்றுகிறது? இது உங்கள் பார்வையில் ஒன்றும் இல்லாததுபோல் தோன்றுகிறது அல்லவா?
ஆயினும் செருபாபேலே! மன உறுதியோடிரு,' என்கிறார் ஆண்டவர். 'தலைமைக் குருவும் யோசதாக்கின் மகனுமாகிய யோசுவாவே! மன உறுதியோடிரு: நாட்டிலுள்ள அனைத்து மக்களே, ஊக்கம் கொள்ளுங்கள்: பணியைத் தொடருங்கள்: ஏனெனில் நான் உங்களோடு இருக்கிறேன்' என்கிறார் படைகளின் ஆண்டவர்.”
“நீங்கள் எகிப்தினின்று புறப்பட்டு வந்தபோது உங்களுக்கு நான் அளித்த வாக்குறுதியின்படி, உங்கள் நடுவில் எனது ஆவி நிலைகொண்டிருக்கிறது: அஞ்சாதீர்கள்.
ஏனெனில் படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே: 'இன்னும் சிறிது காலத்தில் நான் விண்ணுலகையும், மண்ணுலகையும், கடலையும் பாலை நிலத்தையும் நடுக்கமுறச் செய்வேன்.
வேற்றினத்தார் அனைவரையும் நிலைக்குலையச் செய்வேன். அப்போது வேற்றினத்தார் அனைவரின் விருப்பத்திற்குரியவைகளும் இங்கு வந்து சேரும்: இந்தக் கோவிலை நான் மாட்சியால் நிரப்பவேன்' என்கிறார் படைகளின் ஆண்டவர்.
'வெள்ளி எனக்க உரியது, பொன்னும் எனக்கு உரியது', என்கிறார் படைகளின் ஆண்டவர்.
'இந்தக் கோவிலின் முன்னைய மாட்சியைவிடப் பின்னைய மாட்சி மிகுதியாய் இருக்கும்', என்கிறார் படைகளின் ஆண்டவர். 'இந்த இடத்தில் நான் நலம் நல்குவேன்', என்கிறார் படைகளின் ஆண்டவர்.”
தாரியு அரசனது இரண்டாம் ஆட்சியாண்டின் ஒன்பதாம் மாதம், இருபத்து நான்காம் நாள், இறைவாக்கினர் ஆகாய் வாயிலாக ஆண்டவரின் வாக்கு அருளப்பட்டது.
“படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே: குருக்களிடம் சென்று இவற்றிற்குத் திருச்சட்டத்தைத் தீர்ப்பைக் கேள்:
“ஒருவன் தனது மேலாடையின் மடிப்பில் அர்ப்பணிக்கப்பட்ட இறைச்சியை எடுத்துக்கொண்டு போகும் பொழுது, அத்துணியின் மடிப்பு அப்பத்தையோ இறைச்சியையோ திராட்சை இரசத்தையோ எண்ணெயையோ வேறெந்த உணவுப்பொருளையோ தொட்டால், அவையும் அர்ப்பணிக்கப்பட்டவை ஆகுமா?” அதற்குக் குருக்கள், “இல்லை” என்று விடை கூறினர்.
மீண்டும் ஆகாய், “பிணத்தைத் தொட்டதால் தீட்டுப்பட்ட ஒருவன் இவற்றுள் ஒன்றைத் தொட்டால் அதுவும் தீட்டப்பட்டது ஆகுமா?” என்று கேட்டார். அதற்குக் குருக்கள், “ஆம், தீட்டுப்பட்டது ஆகும்” என்றனர்.
தொடர்ந்து ஆகாய் அவர்களிடம் இவ்வாறு சொன்னார்: “அதேபோலத்தான் எனது திருமுன் இந்த மக்களும் இந்த இனத்தாரும்,” என்கிறார் ஆண்டவர். அவ்வாறே அவர்களது உழைப்பின் பயன் ஒவ்வொன்றும் இருக்கிறது. அவர்கள் அங்கே கொண்டு வந்து படைக்கும் பொருளும் தீட்டுப்பட்டதே.
இன்றுவரை நிகழ்ந்ததை இப்பொழுது நினைத்துப் பாருங்கள். ஆண்டவரது கோவிலில் கல்லின்மேல் கல் வைக்கப்படுமுன் நீங்கள் இருந்த நிலை என்ன?
தானியக் குவியலில் இருபது மரக்கால் இருக்கும் என எண்ணி நீங்கள் வந்து பார்க்கையில் பத்துதான் இருந்தது: ஐம்பது குடம் இரசம் எடுக்க ஆலைக்கு வந்தபோது இருபதுதான் இருந்தது.
'உங்களையும் உங்கள் உழைப்பின் பயனையும் வெப்பு நோயாலும் நச்சுப் பனியாலும் கல்மழையாலும் வதைத்தேன்: ஆயினும் நீங்கள் என்னிடம் திரும்பி வரவில்லை', என்கிறார் ஆண்டவர்.
ஒன்பதாம் மாதத்தின் இருபத்து நான்காம் நாளாகிய இன்று ஆண்டவரின் கோவிலுக்கு அடித்தளம் இடப்பட்டுள்ளது. இனிமேல் நிகழப்போவது என்ன என்பதைக் கவனமாய்ப் பாருங்கள்.
விதை இனியும் களஞ்சியத்திலேயே இருந்துவிடுமோ? திராட்சைக் கொடியும் அத்தியும் மாதுளையும் ஒலிவமரமும் இனியும் பயன் தராமல் போகுமோ? இன்று முதல் உங்களுக்கு தான் ஆசி வழங்குவேன்.
மாதத்தின் இருபத்து நான்காம் நாள் ஆண்டவரின் வாக்கு இரண்டாம் முறையாக ஆகாய்க்கு அருளப்பட்டது:
“யூதாவின் ஆளுநனாகிய செருபாபேலிடம் இவ்வாறு சொல்: 'நான் விண்ணுலகையும் மண்ணுலகையும் ஒருங்கே அசைக்கப் போகிறேன்:
அரசுகளின் அரியணையைக் கவிழ்க்கப்போகிறேன்: வேற்றினத்து அரசுகளின் வலிமையை ஒழிப்பேன்: தேர்களையும் அவற்றில் இருப்போரையும் வீழ்த்துவேன்: குதிரைகளும் குதிரை வீரர்களும் ஒருவர் மற்றவரது வாளுக்கு இரையாவர்.'
படைகளின் ஆண்டவர் கூறுகிறார்: 'அந்நாளில் செயல்தியேலின் மகனும் என் ஊழியனுமான செருபாபேலே! உன்னைத் தேர்ந்தெடுப்பேன்,' என்கிறார் ஆண்டவர். 'உன்னை என் அரச இலச்சினையாய் அணிந்துகொள்வேன். ஏனெனில் உன்னையே நான் தெரிந்து கொண்டேன்,' என்கிறார் படைகளின் ஆண்டவர்.”